ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சுவாமியே சரணம் ஐய்யப்பா








1.ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா
எங்கள் ஐய்யப்ப சுவாமியே உன்னை வணங்குகின்றோம். உன்னை சரணடைகின்றோம்.

2.ஓம் கன்னிமூல கணபதி பகவானே
சபரிமலையில், பக்தர்களுக்கு அருள்புரியும் கன்னிமூல கணபதி பகவானே உன்னை வணங்குகின்றோம். உன்னை சரணடைகின்றோம்.

3.ஓம் அத்வைதப் பொருளே
அத்வைத ரூபமாக இருப்பவனே உன்னை வணங்குகின்றோம். உன்னை சரணடைகின்றோம்.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அத்வைதத்தையே உணர்த்துகின்றன.
(அத்வைதம் என்பது “இருப்பது ஒன்றே” என்ற கருத்தாகும். “ நாமும் கடவுளும் ஒன்றே வெவ்வேறு அல்ல, என்பதே இதன் கருத்தாகும். சபரிமலையில் பதினெட்டு படிகள் ஏறிச் சென்றவுடன், கொடிமரத்திற்கு அருகில் “ தத்வமஸி ” என்ற மஹாவாக்கியத்தை காணலாம். இந்த மஹாவாக்கியத்திற்கு “ அதுவே (கடவுளே) நீ என்று அறிவாயாக “ என்று பொருள். இந்த மஹாவாக்கியம் “ சாந்தோக்ய உபநிடதத்தில் “ வருகிறது.)
சுவாமியே சரணம் ஐயப்பா

இன்று முதல் ஐயப்ப சரணகோஷத்துடன்அதற்க்கான மொழிபெயர்ப்பையும் ஐயப்பன் அருளால் பதிவிடலாம் என முயற்ச்சிக்கிறேன்.

சுவாமியே சரணம் ஐயப்பா

வியாழன், 13 ஜூலை, 2017

aanmigam: ப்ருஹ்மயக்ஞம்

aanmigam: ப்ருஹ்மயக்ஞம்: ப்ருஹ்மயக்ஞம் செய்வோம். அந்தணர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினசரி சிறிதளவாவது சொல்வதற்குத்தான் ப்ருஹ்ம யக்ஞம் ...

திங்கள், 25 ஜனவரி, 2016

கருவறையின் தேவ ரகசியம்

 ......
Secrets of sanctums
[ தயவு செய்து அனைவரும் முழுமையாக படிக்கவும் ]

மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.

நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.

பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.

ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.

என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.

கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.

இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.

சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.

இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.

பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.

அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.

கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.

ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம். குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.

ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம். இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.

தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.

கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும். கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.

கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.

கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.

பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

திங்கள், 17 செப்டம்பர், 2012

வினாயகர் சதுர்த்தி:-



விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள். வி இதற்கு மேல் இல்லை. நாயகர் -- தலைவர். வினாயகர் அஸ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற வினாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும். பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருபதனால் கணபதி என அழைக்கப்பட்டார். நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார். ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார். புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்துஅவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார். அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார். மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார்.

வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே. வினாயகர் சதுர்த்தி:- ஒரு சமயம் வினாயகர் கைலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தான். இதனால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை இன்று முதல் சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள். இப்படிப்பட்ட நீசனாகட்டும்என்று சபித்து விட்டார். இதன் காரணமாய் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் வினாயகரயே சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். அதனால்; தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது. நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்என்று கிராமத்து மக்கள் இன்றும் கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும். சகல ஐசுவரியங்களும் தரும் வினாயகர் வழிபாடு. மனத்தாலே நினைத்தாலே ஓடி வந்து அருள்புரியும் முதன்மைக் கடவுள் வினாயகர். கலியுகத்தின் கருணைக்கடல் பிள்ளையார். தன்னை வணங்குபவர்களிற்கு சகல நலன்களையும் அள்ளி வழங்குபவர் வினாயகர்.

எந்த ஒரு காரியம் தொடங்குவதற்கும் முன் முதலில் வினாயகரை வணங்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வரத்தை ஈசன் வினாயகரிற்கு வழங்கியுள்ளார.; இதை கடைப்பிடிக்காத முருகனும் ஏன் ஈசனும் கூட காரியம் நிறைவேறாமல் பின் வினாயகரை வணங்கி எடுத்த காரியம் செவ்வனே முடித்தனர். வுpனாயகரை அவ்வையார் எழுதிய வினாயகர் அகவல் அல்லது நக்கீரர் எழுதிய வினாயகர் திருஅகவல் தினமும் பாராயணம் செய்து வழிபடலாம். நோய்நொடி இல்லாமல் ஏவல், காத்து கறுப்பு அண்டாமல் இருக்க காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் மொழி பெயர்த்த வினாயகர் கவசம் பாராயணம் செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற காசிப முனிவர் இயற்றி கச்சியப்ப சிவாச்சாரியார் மொழி பெயர்த்த காரிய சித்தி மாலை பாராயணம் செய்யலாம். முறைப்படி பூசை அறை வைத்து இருப்பவர்கள் வினாயகர் மூல மந்திரத்தை அல்லது வினாயகர் காயத்திரி மந்திரத்தை முறைப்படி ஒரு தகுந்த குருவிடமிருந்து பெற்று நாளொன்றிற்கு 16, 27, 54, 108, 1008 :::::::::::: என்று எதோ ஒரு எண்ணிக்கையில் செபம் செய்து வரலாம். மூலமந்திரம்:- ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா. . காயத்திரி மந்திரம் :- தற்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தன்னோ தந்தி ப்ரயோதயாத். சிதறு தேங்காய் பொதுவாக பூசைகள் தொடங்கும் போதோ அல்லது நல்ல காரியங்கள் தொடங்கும் போதோ முதலில் வினாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம். இந்த பழக்கம் எப்படி வந்தது என்று பார்த்தால் ஒரு சமயம் வினாயகர் மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். வினாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அவனை வதம் செய்தார். அதாவது ஒரு காரியத்திற்கு செல்லும் முன் ஏற்பட்ட தடையை தேங்காயை வீசி எறிந்து வினாயகர் நீக்கினார். நாம் எந்த காரியம் செய்யும் முன்னும் தடைகளை நீக்க வேண்டும் என வினாயகரை வழிபடுவது வழக்கம். அவர் காட்டிய வழியில் தேங்காயை அவரிற்கு பலி கொடுத்து எடுத்த காரியம் செவ்வனே முடிய வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். மற்றும் நமது பாவங்கள் தேங்காயைப் போன்று வினாயகர் அருளால் சிதற வேண்டும் என்றும் சிதறு காய் போடுவதாக ஒரு கருத்தும் உள்ளது. குட்டிக் கும்பிடுதலும் தோப்புக்கரணமும் ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் காவிரி நதியை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்துக் கொண்டார். வினாயகப் பெருமான் காகம் வடிவெடுத்து அந்த கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி நதியை விடுவித்தார். பின்னர் ஒரு அந்தண சிறுவனாக வடிவெடுத்து நின்றார். போபம் கொண்ட அகத்திய முனிவர் அந்த அந்தண சிறுவனின் தலையில் குட்டினார். அப்போது வினாயகப் பெருமான் தனது சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காக தான் காவிரி நதியை விடுவித்ததாக கூறினார். அகத்திய முனிவரும் தமது தவறிற்கு வருந்தி தன் தலையில் தானே குட்டி கொண்டு வினாயப் பெருமானிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டிக் கொண்டார். அன்றிலிருந்து தலையில் குட்டிக் கும்பிடும் பழக்கம் தொடங்கியதாக கருதப் படுகிறது. கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒரு சமயம் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு டீதாப்புக் கரணம் போட்டு வணக்கம் செலுத்த வைத்தான். வினாயப் பெருமான் அந்த அசுரனை அழித்து தேவர்களை விடுவித்தார். அசுரனிற்கு போட்ட தோப்புக் கரணத்தை தேவர்கள் வினாயப் பெருமானிற்கு போட்டு பக்தியுடன் வணங்கினர். அன்று முதல் வினாயப் பெருமானிற்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆன்மீக ரீதியாக நாம் தோப்புக் கரணம் போடும் போது நமது உடலில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகிறது. குட்டிக் கும்பிடும் போது நமது தலையிலிருக்கும் அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தி உடல் பூராவும் பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும் தருகிறது. இந்த தத்துவத்தை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக் கொள்கிறது.

அருகம்புல் வழிபாடு அனலாசுரன் என்ற அசுரன் உலகத்து மக்களை, தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாறி தகித்த விடுவதனாலேயே அவனிற்கு அனலாசுரன் என்ற பெயர் வந்தது. அவனின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் தேவர்கள் சிவ-சக்தியிடம் முறையிட்டனர் சிவனும் வினாயகரிடம் அனலாசுரனை வதம் செய்யும்படி கூறினார். வினாயகரும் அனலாசுரனுடன் போரிட்டார். அனலாசுரனை வெற்றி கொள்ளமுடியாத வினாயகர் அவனை பிடித்து விழுங்கி விட்டார். வினாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். பிள்ளையாரை அந்த வெப்பம் கடுமையாக தகித்தது. அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக கங்கை நீர் அபிசேகம் செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. அப்போது ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து வினாயகரின் தலை மீது வைத்தார். அனலாசுரன் வினாயகர் வயிற்றினுள்ளே சீரணமாகிவிட்டான். வினாயகரின் எரிச்சலும் அடங்கியது. அன்று முதல் வினாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களிற்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன். என அருள்பாலித்தார். அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. முத்தியைத் தரவல்லது அருகம்புல் உபாசனை. அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது. சங்கடஹர சதுர்த்தி அன்று வினாயகரிற்கு அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர காரிய சித்தியாகும். மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்ல பட்ச சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி என்பது உறுதியாகும். நாகசதுர்த்தி அன்று அபிசேக ஆராதனை செய்து வணங்கி வர நாகதோசம், ராகு, கேதுக்களினால் ஆன சகல தோசமும் நீங்கும். குழந்தை இல்லாதவர்களிற்கு தோசம் நீங்கி குழந்தை பாக்கியம் கிட்டும். செவ்வாய், சனிக்கிழமைகளில் செவ்வரலி அல்லது மஞ்சள் அரலி மலர் சாற்றி வழிபடுதல் சிறப்பானது திருமணத்தடையுள்ளவர்கள் மஞ்சள் பிள்ளையாரை பித்தளைத் தட்டுக்குள் வைத்து மூடி அருகம்புல் சாற்றி 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டுவர திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும். கடுமையான வறுமையில் உள்ளவர்கள் வெள்ளெருக்கு திரி போட்டு நெய் தீபமேற்றி வினாயகரை வழிபட்டு வர வறுமை நீங்கி வளமான வாழ்வு கிட்டும். நவக்கிரக தோசமுள்ளவர்கள் வினாயகரிற்கு பின்புறம் வெள்ளெருக்கு திரியில் நெய்தீபமிட்டு வணங்கி வர நவக்கிரக தோசம் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும். நீண்ட நாட்களாக குழந்தையில்லாதவர்கள், சதுர்த்தி தோறும் வேப்பமரமும், அரசமரமும் சேர்ந்த மரத்தடியில் உள்ள வினாயகரிற்கு முன்னும், பின்னும் வெள்ளெருக்கு திரியில் நெய்தீபமிட்டு வணங்கி எறும்புக்கு நாட்டுச் சர்க்கரை தூவி வர குழந்தைப் பாக்கியம் கிட்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பது எப்படி? மாசி மாதம் தேய்பிறையில் வரும் திதியில் இவிவிரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். இந்தநாள் செவ்வாய்க்கிழமை ஆனால் மிகவும் சிறப்பானதாகும். இதன் பிறகு ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருந்து சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு வருடம் இப்படி விரதம் அனுஷ்டித்து பின்னர் அடுத்த மாசியில் வரும் தேயபிறை சதுர்த்தியில் விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்களை முடித்த பின்னர் குளித்து, திருநீறு பூசி வினாயகர் அகவல் போன்ற பாடல்களை பாடி விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். மாலையில் சதுர்த்தி பூசையில் கலந்து கொண்ட பின்னர், மிளகு கலந்த நீரினை பருகி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் பால் பழம் அருந்தலாம். முடியாதவர்கள் உணவு அருந்தலாம். இந்த விரதத்தை ஆயுள் முழுவதும் அனுஸ்டிக்க வேண்டியதில்லை ஒரு வருடம் முறையாக அனுஸ்டிப்பது போதுமானது. இந்த விரதத்தினை முறைப்படி அனுஸ்டித்தால் வாழ்க்கையில் சகலமும் நமது எண்ணம் போல் ஈடேறும். சதுராவ்ருத்தி தர்ப்பணம். 444 மந்திரங்களைக் கொண்ட சதுராவ்ருத்தி தர்ப்பணம் வினாயகரிற்கு மிகவும் பிடித்தமான ஒரு சிறந்த வினாகர் அருள் பெறக்கூடிய வழிபாட்டு முறையாகும். இப்போது உலகில் இந்த முறையை அனுஸ்டிப்பவர்கள் இல்லை என்ற அளவிற்கு அருகி வந்து விட்டது. இதனை செய்தால் அனைத்து தேவர்களும் வசியமாவார்கள். மாகாலட்சுமி நித்ய வாசம் செய்வார். வாக்கில் சரஸ்வதி குடிகொள்வார். எதிரிகள் தொல்லை அழிந்து போகும். எண்ணிய காரியம் நிறைவேறும். குடும்பம் என்றும் பேரானந்த வாழ்வு வாழும். ஆனால் இதனை எளிதில் செய்ய முடியாது. நவக்கிரகங்கள் இதனை செய்ய விடாமல் தடைசெய்யும். தெய்வ அனுக்கிரகமும், தகுந்த குருவின் ஆசியுடையவர்களால் மட்டுமே அதனை செய்ய முடியும் இந்த உபாசனை கடைசி ஜென்மம் உள்ளவர்களிற்கு மட்டுமெ கிட்டும் என்பதும் ஒரு ஐதீகமாகும். முதலில் வினாயகரிற்கு தேங்காயை சிதறுகாயாக உடைத்து நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மைவிட்டு சிதறி ஓடிவிட வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அவர் சன்னிதானத்தில் அவரிற்கு முன்னால் நின்று வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்து நன்றாக இருந்து எழும்பி தோப்புக் கரணம் போடுதல் வேண்டும். அதேபோல கைகளை வைத்து நெற்றியின் இரு பொட்டுக்களிலும் குட்டி கொள்ள வேண்டும். பின்னர் வினாயகரிற்கு அருகம்புல் மாலை அணிவித்து தூப, தீப, அராதனை செய்து அல்லது செய்வித்து வணங்க வேண்டும். பின்னர் அவரை 3 முறை வலம் வர வேண்டும். வினாயகரிற்கு 1 முறை வலம் வர வேண்டும் என்ற ஒரு நடமுறையும் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான். இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள். சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார். அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள். விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.

விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன? அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும். அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.) பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள். இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம். வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம். இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.