புதன், 23 மே, 2012

சிவலிங்கத் தத்துவம்

கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.

பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.

பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?

லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.

தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.

லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.

இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.

இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக