வெள்ளி, 6 ஜூலை, 2012

வேத வியாசர்


"வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே...' என்கிறது ஒரு ஸ்லோகம். வியாசர் தான் விஷ்ணு, விஷ்ணு தான் வியாசர் என்பது இதன் பொருள். தர்மத்தின் பெருமையை நிலைநாட்ட, விஷ்ணு, கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். அவரே, வியாசராகவும் இருந்து, அந்தக் காவியத்தை திறம்பட எழுதினார்.
வேதவியாசர் என்பது, ஒரு தனி நபரின் பெயரல்ல. ஒரு பதவியின் பெயர். பி.எம்., சி.எம்., ராஜா, ராணி என்று பதவிகளின் பெயராலேயே சிலரை அழைக்கப்போய், அதுவே பெயராக மாறியது போல், ஒரு தோற்றம் உண்டாகிறது அல்லவா! அப்படித்தான் வியாசருக்கு, அவருடைய பதவியே, பெயர் போல நிலைத்து விட்டது. வேதவியாச பீடம் என்பது நிரந்தரமானது. அந்த பீடத்தில் அமரும் தகுதி படைத்தவரை, வேதவியாசர் என்பர். மகாபாரதம் தந்த வியாசருக்கு முன்பும், அந்த பீடத்தில் பலர் அமர்ந்துள்ளனர். வியாசம் என்றால் பகுப்பது. இவர், வேதத்தை நான்காகப் பகுத்தார். அதனாலும் வியாசர் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.
உண்மையில், இவரது பெயர் கிருஷ்ணத்வைபாயனர். "கிருஷ்ண' என்றால், "கருப்பு'. த்வைபாயனர்' என்றால், "தீவில் பிறந்தவர்.' வியாசர் கருப்பு நிறமுடையவர். இவரது தந்தை பராசரர். தாய் சத்தியவதி. இவள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிசுவாக இருந்ததாகப் புராணம் கூறுகிறது. உச்சைச்ரவஸ் என்ற மீனவன் அதைப் பிடித்தான். அவ்வகை மீன், வழக்கத்தை விட பெரிதாக இருக்கவே, கவனமாக அறுத்தான். அதனுள் ஒரு ஆண் மற்றும் பெண் சிசு இருந்தது. அந்த மீன், உபரிச்ரவஸ் என்ற மன்னனின் மூலம் சந்தர்ப்பவசமாக கர்ப்பமானது தெரிய வந்தது. அரசனுக்கு இந்த விஷயம் தெரியவரவே, ஆண் குழந்தையை அவன் எடுத்துக் கொண்டான். பெண் குழந்தையை, மீனவர் தலைவனிடம் கொடுத்து விட்டான்.
அவள் படகு ஓட்டி பிழைத்து வந்தாள். ஒரு சமயம், பராசர முனிவர், ஆற்றின் அக்கறைக்கு செல்ல வந்தார். அவளிடம், "பெண்ணே, நீ முன் ஜென்மத்தில், பித்ருக்களுக்கு மகளாக இருந்தாய். அவர்களது சாபத்தால், மீன் வயிற்றில் பிறந்தாய். உன் உண்மைத் தந்தை, இந்நாட்டின் மன்னன். நீ, எனக்கு மனைவியானால், உலகம் போற்றும் உத்தமனை பெறலாம். அதன்பின், மீண்டும் நீ கன்னியாகவே மாறி விடலாம்...' என்றார்.
முதலில் அவள், தன் தந்தையின் ஒப்புதல் வேண்டுமென நினைத்தாலும், முனிவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டாள். முனிவர் தன் தவபலத்தால், அந்தப் பகலையே, மூடுபனி மூலம் இருளாக்கினார். அவர்கள் இன்புற்றிருந்தனர். வியாசர் பிறந்தார். பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டது. பெற்றவள், மகனை அன்புடன் அணைக்க நெருங்கிய போது, "மீனவப் பெண்ணான நீ, என்னைத் தொடாதே...' என கூறினான்.
சத்தியவதி அழுதாள். மகனிடம் பக்குவமாக, அந்தத் தாயின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார் பராசரர். அதன்பின், சிறுவன் அவளது மடியில் அமர்ந்தான். பராசரர், குழந்தையின் கையில் கமண்டலத்தைக் கொடுத்து, "நீ வேதவியாசன் ஆவாய்...' என்று வாழ்த்தினார். அந்தக்கணமே, வியாசர் சஞ்சாரம் கிளம்பி விட்டார். வருந்தினாள் சத்தியவதி.
"தாயே... எந்த கஷ்டமாக இருந்தாலும், நீ, என்னை நினைத்தால் போதும். அந்தக்கணமே நான் அங்கிருப்பேன்...' என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின், சத்தியவதிக்கு கன்னித்தன்மையை அளித்துவிட்டு, பராசரர் சென்று விட்டார்.
இதன் பின் வியாசர், வேதத்தை நான்காகப் பிரித்து, தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினார். இவருக்கு பிறந்த பிள்ளைகளே, கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரன், பாண்டவர்களின் தந்தையான பாண்டு, மகாஞானியான விதுரர் ஆகியோர்.
இவர்களே, மகாபாரதக் கதைக்கு அடிகோலினர். பாண்டவர்களும், கவுரவர்களும் மறைந்த பின், அவர்களது வரலாறை எழுதினார். "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும்' என்ற நியதியை இந்த நூல் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ஒரு அற்புத காவியத்தை உலகுக்கு அளித்த மகானை, சாதுர்மாஸ்ய விரத துவக்க நாளன்று நினைவு கூர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக