திங்கள், 23 ஜூலை, 2012

காஞ்சி மஹாஸ்வாமிகளின் மஹிமை

கல்யாணத்திற்கு பணம்.

பல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்டராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்தார். அவர் மனைவி தர்மாம்பாள்;ஒரே மகள் காமாட்சி.
அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தைவயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை. உபன்யாசம்பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்துஅளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார். ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.

 இருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்நிச்சயமானது. ஒரு மாதத்தில் திருமணம். மணமகன்ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.

 தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள்,"பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்து, கையிலே எவ்வளவுசேர்த்து வெச்சிண்டிருக்கேள்?" கனபாடிகள் பவ்யமாக,"தாமு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும்அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே"என்று சொல்ல, தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது.
 "அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும்?நகைநட்டு, சீர்செனத்தி,பொடவை, துணிமணி வாங்கி,சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும்பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும். ஏற்பாடுபண்ணுங்கோ!" இது தர்மாம்பாள்.
 இடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள்.

 உடனே தர்மாம்பாள், "ஒரு வழி இருக்கு, சொல்றேன், கேளுங்கோ,கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ, கொஞ்சம்பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ, அங்கேஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு,கல்யாணப்பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிஷயத்தைச் சொல்லுங்கோ. பதினைந்தாயிரம் பண ஒத்தாசைகேளுங்கோ...ஒங்களுக்கு 'இல்லே'னு சொல்லமாட்டா பெரியவா"என்றாள் நம்பிக்கையுடன்.

 அவ்வளவுதான்...ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம்வந்துவிட்டது. "என்ன சொன்னே..என்ன சொன்னே நீ!பெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது...என்ன வார்த்தபேசறே நீ" என்று கனபாடி முடிப்பதற்குள்.....
 "ஏன்? என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குருதானே? குருவிடம்யாசகம் கேட்டால் என்ன தப்பு?" என்று கேட்டாள் தர்மாம்பாள்.

 "என்ன பேசறே தாமு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம "ஞான"த்தைத்தான்யாசிக்கலாமே தவிர, "தான"த்தை [பணத்தை] யாசிக்கப்படாது"என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள். பயனில்லை. அடுத்த நாள்"மடிசஞ்சி"யில் [ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப் பை]தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டார்கனபாடிகள்.
ஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம்.ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின்கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.



 பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும்அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாகவாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார்..இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், "ஐயா...ஐயா...அந்ததட்டிலே க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன். பெரியவாளிடம்சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும். அதை இப்படி எடுங்கோ" என்றுசொல்லிப் பார்த்தார். யார் காதிலும் விழவில்லை.

 அதற்குள் மகா ஸ்வாமிகள்,கனபாடிகளைப் பார்த்துவிட்டார்.ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், "அடடே! நம்ம கரூர் ராமநாதகனபாடிகளா? வரணும்..வரணும். ஸ்ரீரங்கத்தில் எல்லோரும்க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?"என்று விசாரித்துக் கொண்டே போனார்.

 "எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது"என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்பண்ணி எழுந்தார். உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே,"ஆத்திலே...பேரு என்ன...ம்..தர்மாம்பாள்தானே? சௌக்யமா?ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள். அவரோடஅப்பா சுப்ரமண்ய கனபாடிகள். என்ன நான் சொல்ற பேரெல்லாம்சரிதானே?" என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்"சரிதான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தாமுதான்பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா.."என்று குழறினார்.

 "அப்போ, நீயா வரல்லே?"; இது பெரியவா.

 "அப்படி இல்லே பெர்யவா. பொண்ணுக்குக் கல்யாணம்வெச்சுருக்கு, தாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுபத்திரிகையை சமர்ப்பிச்சு.." என்று கனபாடிகள் முடிப்பதற்குள்"ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா" என்று பூர்த்திபண்ணிவிட்டார் ஸ்வாமிகள்.
 பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுபுரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா,"உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன். நடத்திக்கொடுப்பியா?" என்று கேட்டார்.

 "அஸைன்மெண்டுன்னா பெரியவா?" இது கனபாடிகள்.
 "செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம்.எனக்காகப் பண்ணுவியா?"
 பெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன், வந்த விஷயத்தைவிட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு,"சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்"என்றார்.
 உடனே பெரியவா, "ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட்கொடுக்கப் போறேன்? உபன்யாசம் பண்றதுதான். திருநெல்வேலிகடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமானநிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாமசெத்துப் போய்டறதாம். கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுலபெருமாள் கோயில்ல "பாகவத உபன்யாசம்" பண்ணச் சொன்னாளாம்.ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்இங்கே வந்தார். விஷயத்தைச் சொல்லிட்டு,"நீங்கதான் ஸ்வாமி"பாகவத உபன்யாசம்" பண்ண ஒருத்தரை அனுப்பி உதவிபண்ணணும்"னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார்.நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும்.விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோசிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோ. இன்னிக்கு ராத்திரியேவிழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவனை [வெகுமானம்] அவாபார்த்துப் பண்ணுவா. போ..போ...போய் சாப்டுட்டு ரெஸ்ட்எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம்பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்வாமிகள்.
 அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள்மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில்பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அைழைத்துச் சென்றார்.

ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள்கோயில். கோயில். பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார்.கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் காக்காகூடகனபாடிகளை வந்து பார்க்கவிலை. "உபன்யாசத்தின்போது எல்லோரும்வருவா" என அவரே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார்.

 மாலை வேளை, வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்துஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சி ஆச்சார்யாளைநினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரேஎதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள், கோயில் பட்டர்,கோயில் மெய்க்காவல்காரர். இவ்வளவு பேர்தான்.
 உபன்யாசம் முடிந்ததும், "ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமேவரல்லே?" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார்கனபாடிகள்.

அதற்கு பட்டர்,"ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக்கிடக்கு! இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவதுஎன்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை, அதைமுடிவு கட்டிண்டுதான் "கோயிலுக்குள்ளே நுழைவோம்"னுசொல்லிட்டா. உப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துலஊர் இ்ப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன்" என்றுகனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார்.

 பட்டரும், மெய்க்காவலரும்,பெருமாளும் மாத்திரம் கேட்கஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார்,ராமநாத கனபாடிகள். பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனைபண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயைவைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம்சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார். பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக்கனபாடிகளிடம் அளித்து , "ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படிஆயிடுத்து. மன்னிக்கணும்.ரொம்ப நன்னா ஏழு நாளும் கதைசொன்னேள். எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனைபண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயிலேத்திவிட்டுடறேன்" என கண்களில் நீர் மல்க உருகினார்!.

 திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலரும் வந்துவழியனுப்பினர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம்வந்து சேர்ந்தார் கனபாடிகள்.
 அன்றும் மடத்தில் ஆச்சார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம்.அனைவரும் நகரும்வரை காத்திருந்தார் கனபாடிகள்.

 "வா ராமநாதா! உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயா?பேஷ்...பேஷ்! உபன்யாசத்துக்கு நல்ல கூட்டமோ?சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?" என்று உற்சாகமாகக்கேட்டார் ஸ்வாமிகள்.
 கனபாடிகள் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில்பெரியவாளிடம், "இல்லே பெரியவா, அப்படி எல்லாம்கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளேஏதோ பிரச்னையாம் பெரியவா, அதனாலே கோயில் பக்கம்ஏழு நாளும் யாருமே வல்லே"என்று ஆதங்கப்பட்டார்கனபாடிகள்.

 "சரி...பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?"
 "ரெண்டே..ரெண்டு பேர்தான் பெரியவா.அதுதான் ரொம்பவருத்தமா இருக்கு" இது கனபாடிகள்.
 உடனே பெரியவா, "இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்தரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்" என்றார்.

 "வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்கோயில் பட்டர். இன்னொண்ணு கோயில் மெய்க்காவலர்"என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்வாமிகள் இடி இடியென்றுவாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

 "ராமநாதா... நீ பெரிய பாக்யசாலிடா! தேர்ல ஒக்காந்துகிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்ஒருத்தன்தான் கேட்டான். ஒனக்கு பாரு.ரெண்டு பேர்வழிகள்கேட்டிருக்கா. கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி"என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும்சிரிப்பு வந்துவிட்டது.

 "அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லைஎன்ன?" என்றார் பெரியவா.
 "அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவல்காரர்ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவாகெடச்சுது பெரியவா!" ;கனபாடிகள் தெரிவித்தார்.
 "ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தே.உன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணனும்.இந்தச்சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு" என்று கூறி, காரியஸ்தரைக்கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளு்க்குச் சால்வைபோர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார்.

 "இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு. நீயும் ஒ்ன் குடும்பமும்பரம சௌக்கியமா இருப்பேள்" என்று உத்தரவும் கொடுத்தார்ஸ்வாமிகள்.

 கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தகனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காகவந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்குவந்தது."பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை...பெண் கல்யாணம்நன்னா நடக்கணும். "அதுக்கு...அதுக்கு..." என்று அவர்தயங்கவும்,"என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாகத்தைசந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார்.ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா." என்று விடைகொடுத்தார் ஆச்சார்யாள்.

 ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படிஇருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார்ராமநாத கனபாடிகள்.

 "இருங்கோ..இருங்கோ...வந்துட்டேன்..."உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல்..
 வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்கொடுத்தாள். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துப் போனாள்.காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு,"இங்கே பூஜைரூமுக்கு வந்து பாருங்கோ" என்று கனபாடிகளை அழைத்துப்போனாள்,

 பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள்.அங்கே ஸ்வாமிக்குமுன் ஒரு பெரிய மூங்கில் தட்டில்,பழ வகைகளுடன் புடவை,வேஷ்டிஇரண்டு திருமாங்கல்யம்,மஞ்சள்,குங்குமம்,புஷ்பம்இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.

 "தாமு..இதெல்லாம்..." என்று அவர் முடிப்பதற்குள்,,"காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதாஇன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்துவெச்சுட்டுப் போறா. "எதுக்கு?"னு கேட்டேன். "ஒங்காத்து பொண்கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா"னு சொன்னா" என்று முடித்தாள் அவர் மனைவி.

 கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. "தாமு,பெரியவாளோட கருணையே கருணை. நான் வாயத் திறந்துஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம்இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு" என்று நா தழுதழுத்தவர்"கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ" என்றுகேட்டார். "நான் எண்ணிப் பார்க்கலே" என்றாள் அவர் மனைவி.
 கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.         

 பதினைந்தாயிரம் ரூபாய்!        

 அந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து"ஹோ"வென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

வேத வியாசர்


"வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே...' என்கிறது ஒரு ஸ்லோகம். வியாசர் தான் விஷ்ணு, விஷ்ணு தான் வியாசர் என்பது இதன் பொருள். தர்மத்தின் பெருமையை நிலைநாட்ட, விஷ்ணு, கிருஷ்ணராக பூமியில் அவதரித்தார். அவரே, வியாசராகவும் இருந்து, அந்தக் காவியத்தை திறம்பட எழுதினார்.
வேதவியாசர் என்பது, ஒரு தனி நபரின் பெயரல்ல. ஒரு பதவியின் பெயர். பி.எம்., சி.எம்., ராஜா, ராணி என்று பதவிகளின் பெயராலேயே சிலரை அழைக்கப்போய், அதுவே பெயராக மாறியது போல், ஒரு தோற்றம் உண்டாகிறது அல்லவா! அப்படித்தான் வியாசருக்கு, அவருடைய பதவியே, பெயர் போல நிலைத்து விட்டது. வேதவியாச பீடம் என்பது நிரந்தரமானது. அந்த பீடத்தில் அமரும் தகுதி படைத்தவரை, வேதவியாசர் என்பர். மகாபாரதம் தந்த வியாசருக்கு முன்பும், அந்த பீடத்தில் பலர் அமர்ந்துள்ளனர். வியாசம் என்றால் பகுப்பது. இவர், வேதத்தை நான்காகப் பகுத்தார். அதனாலும் வியாசர் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.
உண்மையில், இவரது பெயர் கிருஷ்ணத்வைபாயனர். "கிருஷ்ண' என்றால், "கருப்பு'. த்வைபாயனர்' என்றால், "தீவில் பிறந்தவர்.' வியாசர் கருப்பு நிறமுடையவர். இவரது தந்தை பராசரர். தாய் சத்தியவதி. இவள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் சிசுவாக இருந்ததாகப் புராணம் கூறுகிறது. உச்சைச்ரவஸ் என்ற மீனவன் அதைப் பிடித்தான். அவ்வகை மீன், வழக்கத்தை விட பெரிதாக இருக்கவே, கவனமாக அறுத்தான். அதனுள் ஒரு ஆண் மற்றும் பெண் சிசு இருந்தது. அந்த மீன், உபரிச்ரவஸ் என்ற மன்னனின் மூலம் சந்தர்ப்பவசமாக கர்ப்பமானது தெரிய வந்தது. அரசனுக்கு இந்த விஷயம் தெரியவரவே, ஆண் குழந்தையை அவன் எடுத்துக் கொண்டான். பெண் குழந்தையை, மீனவர் தலைவனிடம் கொடுத்து விட்டான்.
அவள் படகு ஓட்டி பிழைத்து வந்தாள். ஒரு சமயம், பராசர முனிவர், ஆற்றின் அக்கறைக்கு செல்ல வந்தார். அவளிடம், "பெண்ணே, நீ முன் ஜென்மத்தில், பித்ருக்களுக்கு மகளாக இருந்தாய். அவர்களது சாபத்தால், மீன் வயிற்றில் பிறந்தாய். உன் உண்மைத் தந்தை, இந்நாட்டின் மன்னன். நீ, எனக்கு மனைவியானால், உலகம் போற்றும் உத்தமனை பெறலாம். அதன்பின், மீண்டும் நீ கன்னியாகவே மாறி விடலாம்...' என்றார்.
முதலில் அவள், தன் தந்தையின் ஒப்புதல் வேண்டுமென நினைத்தாலும், முனிவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டாள். முனிவர் தன் தவபலத்தால், அந்தப் பகலையே, மூடுபனி மூலம் இருளாக்கினார். அவர்கள் இன்புற்றிருந்தனர். வியாசர் பிறந்தார். பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தைக்கு ஏழு வயதாகி விட்டது. பெற்றவள், மகனை அன்புடன் அணைக்க நெருங்கிய போது, "மீனவப் பெண்ணான நீ, என்னைத் தொடாதே...' என கூறினான்.
சத்தியவதி அழுதாள். மகனிடம் பக்குவமாக, அந்தத் தாயின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார் பராசரர். அதன்பின், சிறுவன் அவளது மடியில் அமர்ந்தான். பராசரர், குழந்தையின் கையில் கமண்டலத்தைக் கொடுத்து, "நீ வேதவியாசன் ஆவாய்...' என்று வாழ்த்தினார். அந்தக்கணமே, வியாசர் சஞ்சாரம் கிளம்பி விட்டார். வருந்தினாள் சத்தியவதி.
"தாயே... எந்த கஷ்டமாக இருந்தாலும், நீ, என்னை நினைத்தால் போதும். அந்தக்கணமே நான் அங்கிருப்பேன்...' என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின், சத்தியவதிக்கு கன்னித்தன்மையை அளித்துவிட்டு, பராசரர் சென்று விட்டார்.
இதன் பின் வியாசர், வேதத்தை நான்காகப் பிரித்து, தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினார். இவருக்கு பிறந்த பிள்ளைகளே, கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரன், பாண்டவர்களின் தந்தையான பாண்டு, மகாஞானியான விதுரர் ஆகியோர்.
இவர்களே, மகாபாரதக் கதைக்கு அடிகோலினர். பாண்டவர்களும், கவுரவர்களும் மறைந்த பின், அவர்களது வரலாறை எழுதினார். "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும்' என்ற நியதியை இந்த நூல் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ஒரு அற்புத காவியத்தை உலகுக்கு அளித்த மகானை, சாதுர்மாஸ்ய விரத துவக்க நாளன்று நினைவு கூர்வோம்.

வியாழன், 14 ஜூன், 2012

மனதும் ஆரோக்கியம் ஆகட்டும்! - இணையத்தில் படித்தது.

உடல் ஆரோக்கியம் மட்டுமே ஒருவருக்கு போதுமானதல்ல. மனஆரோக்கியமும் முக்கியம். மனதை கண்டபடி ஒடவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளையெல்லாம் மூளைக்குள் திணித்து விட்டு, உடலுக்கு மட்டும் பயிற்சி கொடுப்பது எந்த விதத்திலும் சரியாக இருக்காது.
இம்மாதிரியாக மனதை பாதிக்கும் முதல் விஷயம் எது என்று பட்டியலிட்டால், முதல் இடத்தில் வந்து நிற்பது பொறாமை. தெரிந்தவர்கள் யாராவது உங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தால் அப்போது ஒட்டிக் கொள்கிறது பொறாமை. மற்றவர்களோடு உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் தான் கடைசியில் இந்த பொறாமையை உங்களுக்குள் அனுமதித்து விடுகிறது.
ஏற்றத்தாழ்வு என்பது எப்போதுமே நம்முடன் கலந்துபோன ஒரு விஷயம். இது பணம் படைத்தவர்களிடம் தொடங்கி பிச்சைக்காரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. தனக்கு சமமான பணம் படைத்த ஒருவர் திடீரென புதிதாக ஒரு எஸ்டேட் வாங்கி விட்டால், இந்த பணக்காரர் மனதளவில் சோர்ந்து விடுகிறார். தன் அந்தஸ்தை சுட்டிக்காட்ட அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதிலேயே அவர் நேரம் கரைகிறது. இதில் தன் குடும்பத்தையும் வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களையும் பாடாய்ப்படுத்துபவர்களும் உண்டு.
பொறாமை எந்த அளவுக்கு மனிதனை கொண்டு போகும் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு.
ஒரு பக்தன் அனுதினமும் தன் பிரார்த்தனையில் இறைவனிடம் தனக்கு காட்சி தர வேண்டும் என்றே கேட்டு வந்தான். ஆனால் அடிப்படையில் அவனுக்குள் ஒரு பொறாமை சிந்தனை ஊறிக்கிடந்ததை தெரிந்து கொண்ட இறைவன், அவனை சோதிக்க எண்ணி, ஒருநாள் கனவில் அவனுக்கு தரிசனம் தந்தார். "மகனே... வேண்டுவன கேள்'' என்றார்.
பக்தனுக்கு ஆச்சரியம். அதிர்ச்சி. எதிரே இறைவன் காட்சி கொடுத்து `வேண்டுவன கேள்' என்கிறார். சட்டென எதைக் கேட்பது? எதையாவது கேட்கும்போது மற்ற எதுவும் விடுபட்டுப் போய் விடக்கூடாதே என்ற கவலையில் இறைவன் கேள்விக்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருக்கிறான்.
அவள் குழப்பத்தில் இருப்பதை சுலபத்தில் புரிந்து கொண்ட இறைவன், "மகனே, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நான் அப்படியே தந்து விடுவேன். அதேநேரம் உன் எதிர்வீட்டில் உள்ள ஏகாம்பத்துக்கு நீ கேட்டதை விட இரண்டு மடங்கு கொடுத்து விடுவேன். அதாவது உனக்கு பத்துலட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று நீ கேட்டால் அடுத்த நொடியில் உன் வீட்டில் பத்து லட்சரூபாய் இருக்கும். அதேநேரம் உன் எதிர்வீட்டுக்காரன் வீட்டில் 20 லட்சம் இருக்கும்'' என்றார்.
இப்போது பக்தன் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது. எதிர்வீட்டில் இருப்பவைனை விட பொருளாதாரத்தில் வளர்ந்து காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனிடம் பிரார்த்தனைக்கே முன் வந்தான். இப்போதோ இறைவன் அவன் கோரிக்கையின் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று உள்ளுர வருந்தினான்.
இருந்தாலும் வந்திருப்பது இறைவனாயிற்றே. அதனால் அவரிடம் எதையாவது கேட்டுத்தான்ஆக வேண்டும். யோசித்தபோது அவனுக்குள் ஒரு புதிய திட்டம் தோன்றியது. அவனின் ஒரே எதிரியான எதிர்வீட்டு ஏகாம்பரம் தான் கேட்கும் எந்த வரத்தின் மூலமும் தன்னை விட பெரியவன் ஆகிவிடக் கூடாது.
இவன் தாமதிப்பதைக் கண்ட இறைவன், "மகனே...சீக்கிரம் கேள். எனக்கும் உன் போன்ற பக்தர்களை சந்தித்து அவர்கள் கேட்டதை கொடுக்கும் கடமை இருக்கிறது அல்லவா'' என்று நினைவூட்டினார்.
இதற்குள் இவனும் என்ன கேட்கலாம் என்று தீர்மானித்து விட்டான். இறைவனிடம், `இறைவா...என் ஒரு கண்ணை குருடாக்கி விடுங்கள். அதுபோதும்' என்றான்.
இப்போது இறைவனுக்கே அதிர்ச்சி. இந்த பக்தன் நினைத்திருந்தால் கோடிகோடியாய் கேட்டு தன்வாழ்வை வளப் படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அனால் அதுபற்றியெல்லாம் இவன் கேட்காமல், தன்ஒரு கண்ணை குருடாக்கச் சொன்னால் என்னஅர்த்தம்?
இந்த சந்தேகத்தையே இறைவனும் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா?
`இறைவா...என்னை எல்லாவிதத்திலும் டென்ஷனாக்குவதே அந்த எதிர்வீட்டு ஏகாம்பரம் தான். அப்படியிருக்க, அவன் உங்கள் வரத்தால் என்னை விட பெரியவனாக எப்படி விடுவேன்? இப்போது நான் கேட்ட வரத்தின்படி என் ஒரு கண் தான் குருடாகிப் போகும். ஆனால் எதிர்வீட்டு ஏகாம்பரத்துக்கோ இரண்டு கண்ணுமே குருடாய்ப் போய் விடும். அவன் தன் பேரக்குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிப்படியில் ஏறும்போது கண் தெரியாமல் என்றாவது ஒருநாள் தடுக்கி விழும்வான் அதை எதிர் வீட்டில் இருந்தபடி என் ஒற்றைக் கண்ணால் பார்த்து புளகாங்கிதம் அடையணும்' என்று சொன்னான்.
நல்ல வேளையாக அவன் கேட்ட வரத்தை இறைவன் கொடுத்தாரா, இல்லையா என்பதற்குள் அவன் கண் விழித்து விட்டான்.
பொறாமை ஒருவனை எந்த மாதிரி நிலைக்கு கொண்டு போய்விட்டது பார்த்தீர்களா? மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து நாமும் அவர்கள் மாதிரி உயர எந்த மாதிரியான வாய்ப்பு இருக்கிறது என்பதை சிந்திக்க தடையாக இருப்பதே இந்த மாதிரியான பொறாமைக் குணம் தானே. எனவே பொறாமையை விட்டொழிப்போம். அப்போது உடல் மாதிரியே மனமும் ஆரோக்கியம் ஆகி விடும்.

சனி, 26 மே, 2012

இணையதளத்தில் படித்தது...

பிறவிப்பிணியை போக்கும் மந்திரம்


பிறவிப்பெருங்கடலை நீந்தி இறைவனின் திருவடியை சரண் அடைய வேண்டும் என்பது தான் மனித வாழ்க்கையின் லட்சியமாகும். இறைவனுடன் நாம் ஒன்று கலக்க வேண்டும் என்றால் அதற்கு உதவ ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் தான் `சிவாயநம'. இது சிவ நாமங்களில் உயர்ந்தது. பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்து இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் மகிமையை விளக்கும் கதை ஒன்று உள்ளது. அதை அறிந்து கொள்வோமா...
நாரதர் தனது தந்தையான பிரம்மாவிடம் சென்று `தந்தையே, சிவநாமங்களில் உயர்ந்தது `சிவாயநம' என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்' என்றார்.
பிரம்மா நாரதரிடம், `நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக்கேள்', என்றார்.
நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தை கேட்டார்.
நாரதர் இதைக்கேட்டதும், அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. இதைப்பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
அவர் பிரம்மாவிடம் ஓடிச்சென்று, `தந்தையே, சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,' என்றார்.
`நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,' என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா.
இதன்படி நாரதரும் ஆந்தையிடம் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது.
நாரதர் பதறிவிட்டார். பிரம்மாவிடம், `என்ன இது சோதனை' என்று கேட்டார்.
பிரம்மா, `நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ, அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,' என்றார்.
`தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்,' என்று பயந்து நடுங்கினார் நாரதர்.
`பயம் வேண்டாம்' என்று பிரம்மா தைரியம் கூறி நாரதரை அனுப்பி வைத்தார். நாரதரும், கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அப்போது தான் பிறந்த கன்று இதைக்கேட்ட உடனே உயிரை விட்டது.
நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால் இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும், என நினைத்தார் நாரதர்.
அப்போது, அங்கு வந்த பிரம்மா அவரிடம், `கன்றும் இறந்து விட்டதா. சரி பரவாயில்லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,' என்றார்.
இதைக்கேட்ட நாரதர் அலறிவிட்டார், `பிரம்ம தேவா என்ன இது? அந்தக்குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான், என்றார் நாரதர்.
இருந்தாலும் பிரம்மா விடவில்லை. `இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. `நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்' என்று குழந்தை கூறியது.
அந்தக்குழந்தை மேலும் கூறியது, `சிவாயநம என்பதை `சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி என்றால் சிவம்; வ என்றால் திருவருள், ய என்றால் ஆன்மா, ந என்றால் திரோதமலம், ம என்றால் ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். `நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். `சிவாயநம' என்று உள்ளம் உருக கூறினால், இந்த பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்'' என்றது குழந்தை.
இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார்.
பிறவிப்பிணியில் இருந்து விடுபட `சிவாயநம' என்போம், இறைவனின் திருவடிகளை அடைவோம்.

புதன், 23 மே, 2012

சிவலிங்கத் தத்துவம்

கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.

பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.

பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?

லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.

தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.

லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.

இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.

இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.